# தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழ் # பழனி மலைக்கோவிலில் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 13 ஆண்டுகளுக்கு பின்பு மூலவர் பீடத்தில் மருந்து சாத்தும் நிகழ்ச்சி வரும் ஜனவரி 20ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம்
பழனி மலைக்கோவிலில் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 13 ஆண்டுகளுக்கு பின்பு மூலவர் பீடத்தில் மருந்து சாத்தும் நிகழ்ச்சி வரும் ஜனவரி 20ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
கும்பாபிஷேக திருப்பணியின் முக்கிய நிகழ்வாக பழனி மலைக்கோவிலின் மூலவரான பால தண்டாயுதபாணி சிலை அமைந்ததிருக்கும் மூலவர் பீடத்திற்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி வரும் ஜனவரி 20ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 5:30 மணிக்கு மலைக்கோவில் சன்னதி திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும், அதிகாலை 5:40 மணிக்கு பூஜையும், காலை 6:10 மணிக்கு சிறு காலசாந்தி பூஜையும், 6:20 மணிக்கு காலசாந்தி பூஜையும் நடைபெற உள்ளது.
அஷ்டபந்தன மருந்து சாத்துவதற்காக காலை 6:30 மணி முதல் கோவிலில் உள்ள சண்முகர் சன்னதியில் சிறப்பு பூஜைகளும் யாகசாலை பூஜைகளும் நடைபெறும். அதைத் தொடர்ந்து காலை 9:45 மணிக்கு மேல் காலை 10:30 மணிக்குள் மூலவர் பீடத்திற்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், கலச அபிஷேகமும் நடைபெறும். அதன் காரணமாக, வரும் ஜனவரி 20ஆம் தேதி காலை 6:30 மணி முதல் காலை 10:30 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பின்பு, காலை 10:30 மணிக்கு மேல் வழக்கம் போல், பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
Comments
Post a Comment