DINAVELMEDIA7 # தஞ்சை, புதுக்கோட்டையில் 2.29 லட்சம் ஏக்கர் பாசன வசதி அளிக்கும் புது ஆறு என்று அழைக்கப்படும் ...




தஞ்சை, புதுக்கோட்டையில் 2.29 லட்சம் ஏக்கர் பாசன வசதி அளிக்கும் புது ஆறு என்று அழைக்கப்படும் கல்லணைக்கால்வாய் இன்றுடன்(வெள்ளிக்கிழமை) 86 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த ஆறு மூலம் 694 ஏரி, குளங்களும் நிரப்பப்படுகிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இது தவிர சுற்றுலா தலமாகவும் திகழ்ந்து வருகிறது. தஞ்சைக்கு பெருமை சேர்ப்பது கட்டிடக்கலையின் உச்சமாக திகழும் தஞ்சை பெரியகோவில் என்றால் அது மிகையாது. அதே போல் பொறியியல் துறையின் உச்சமாக தஞ்சை புது ஆறு என்று அழைக்கப்படும் கல்லணைக்கால்வாய் திகழ்ந்து வருகிறது.

இந்த ஆறு பிணந்தின்னி ஆறு என்றும், தஞ்சையின் தேம்ஸ் நதி என்றும் அழைக்கப்படுவது உண்டு. இந்த ஆறு வெட்டப்பட்டு 1934-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி திறக்கப்பட்டது. நாளையுடன்(வெள்ளிக்கிழமை) இந்த ஆறு தனது 86-வது வயதை பூர்த்தி செய்து 87-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது.

மேட்டூர் அணை கட்டப்பட்ட பின்னர் மேட்டூர் அணையின் சிறப்பு திட்டம் 1925-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. அதில் தஞ்சை மாவட்டத்தின் வானம் பார்த்த பூமியாக இருந்த ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி வரையில் பாசன வசதி அளிக்கும் வகையில் கல்லணைக்கால்வாய் வெட்டப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் 2 லட்சத்து ஆயிரத்து 44 ஏக்கரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 922 ஏக்கரும் என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 966 ஏக்கர் பாசனவசதி அளித்து வருகிறது. இந்த ஆற்றை அன்றைய ஆங்கிலேயே அரசின் ராணுவப்பொறியாளர் கர்னல் டபிள்யூ.எம்.எல்லிஸ் வடிவமைத்தார். இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் நதியை முன்னுதாரணமாக கொண்டு தான் தஞ்சை நகரின் மத்தியில் பெரியகோவில் மதில்சுவரை முத்தமிட்டு செல்வது போல் இந்த கால்வாயை வடிவமைத்தார்.

கல்லணை தலைப்பில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் தொண்டியில் உள்ள மும்பாலை வரையிலான 149 கி.மீ. நீளமுள்ள இந்த ஆற்றில் 109 கி.மீ. நீளம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்டது. மீதம் உள்ளவை சுதந்திர இந்திய அரசால் வெட்டப்பட்டவை. இந்த ஆற்றில் ’ஏ’ கால்வாயில் இருந்து பி, சி, டி, இ என மொத்தம் 327 கிளை வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. இதன் மொத்த நீளம் 1,232 கி.மீ ஆகும். குறிப்பாக கல்லணை தலைப்பில் தொடங்கி ஒரத்தநாடு அருகில் உள்ள வெட்டிக்காடு வரையிலான சுமார் 70 கி.மீ. தூரம் மிகவும் ஆபத்தானதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த ஆறு விவசாயத்துக்காக முழுக்க, முழுக்க மனித உழைப்பினால் வெட்டப்பட்டது. இதில் காட்டாறு, கழிவுநீர் என ஒரு சொட்டு நீரும் கலக்க முடியாத வண்ணம் வெட்டப்பட்டது. இந்த ஆற்றில் எங்குமே கழிவுநீரும், காட்டாற்று தண்ணீரும் கலக்க முடியாத வகையில் ஆற்றின் குறுக்கே சைபன் எனப்படும் சுரங்கங்களும்(சுரங்க நீர் பாதை), மேல்நிலை கால்வாய்களும்(அதாவது காட்டாறுக்கு மேலே கால்வாய் செல்வதற்கு பாலம்) கட்டப்பட்டுள்ளன.

வெள்ளக்காலங்களில் காட்டாற்று தண்ணீரை உள்வாங்கி வெளியேற்ற கால்வாய் சுரங்கங்களும், தண்ணீரின் அளவை சீராக வைத்துக் கொள்ள 505 இடங்களில் ‘டிராப்’ எனப்படும் நீரொழுங்கிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளக் காலங்களில் தண்ணீரை எளிதில் வெளியேற்றும் வகையில் இயற்கை இடர்பாடு மீட்பு தத்துவத்துக்கு உதாரணமாக இந்த கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கல்லணைக்கால்வாயில் இருந்து கிளை வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் பாசனத்திற்கு போக, மீதி தண்ணீர் கல்லணைக்கால்வாயில் வந்து சேரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பு. இப்படி பல்வேறு புதுமைகளைக் கொண்டதாக இந்த ஆறு திகழ்ந்து வருகிறது.

முழுக்க முழுக்க பாசனத்துக்காக மட்டுமே வெட்டப்பட்டது. இயற்கையான ஆறுகள் பள்ளத்தை நோக்கியே ஓடும். ஆனால் கல்லணைக்கால்வாய் மேடான பகுதிகளுக்குள்ளும் புகுந்து சென்று கடைமடை வரை தண்ணீரை தடையில்லாமல் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது ஆகும். இதனால்தான், இந்த ஆறு தஞ்சை பெரிய கோயிலை ஒட்டி 30 ஆடி ஆழத்திலும், ஒரத்தநாடு திருவோணம் அருகே 30 அடி உயரத்திலும் செல்கிறது.

அதே நேரத்தில் வானம் பார்த்த பூமியாக இருந்த ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி பகுதிகளில் உள்ள விளை நிலங்களை செழுமைப்படுத்தி வரும் கல்லணைக்கால்வாய் விவசாயிகளின் கொடை என்றால் அது மிகையாகாது. வெறும் 4,000 கன அடி மட்டுமே இதில் திறக்கப்படும். அந்த குறைந்த நீரை கொண்டு, ஒரு சொட்டு நீரும் வீணாகாமல் சுமார் 3 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆக கல்லணைக்கால்வாய் விவசாயிகளின் வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது.

இந்த ஆற்றின் கிளை வாய்க்கால்கள் மூலம் கொண்டு செல்லப்படும் தண்ணீரைக்கொண்டு தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 694 ஏரி, குளங்கள் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா