DINAVELMEDIA7 # நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி...
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் இன்று (25.08.2020) பேட்டி அளித்தார்.
இந்த பேட்டியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் 2000 முதல் 2500 நபர்கள் வருகை தருகிறார்கள். தற்போது தமிழக அரசு இ-பாஸ் பெறும் முறையை எளிமைப்படுத்தியதால் பல்வேறு நபர்கள் நமது மாவட்டத்திற்கு வருகை தருகிறார்கள். பொது மக்கள் தேவையான பணிகளுக்கு மட்டும் இ—பாஸ் பெற்று வரவேண்டும். வருவாய் துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் காட்டேஜ்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அரசு தெரிவித்துள்ளபடி தற்போது வரை சுற்றுலா பயணிகளுக்கு நமது மாவட்டத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவை இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்திற்கு மட்டுமே இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும். பொது மக்கள் தேவையில்லாமல் வெளிவருவதை தவிர்க்க வேண்டும். நமது மாவட்டத்தில் 24.08.2020 அன்று வரை 322 நபர்கள் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசு தெரிவித்துள்ளபடி பொதுமக்கள் கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை நாட வேண்டும். நமது மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயால் 8 நபர்கள் இறந்துள்ளார்கள். இதில் 5 நபர்கள் தாமதமாக வந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டது. பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய தாமாக முன்வர வேண்டும். மேலும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று நோய் உறுதியானால் உடனடியாக மருத்துவமனையில் அதற்கான சிகிச்சையினை எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியில் வரும் பொழுது முககவசங்களை அணிந்து சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். தேவையில்லாமல் ஒரு இடத்தில் அதிகமாக நபர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளை தொடர்ந்து பின் பற்ற வேண்டும். அத்தியாவசிய பணிகளுக்கு இல்லாமலும், இ-பாஸ் பெறாமலும் பயணம் செய்யும் நபர்களை கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்களை திருப்பி அனுப்பி வைக்கப்படுவதோடு அபராதம் விதிக்கப்படும்.
24.08.2020 அன்று நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவிட் கேர் சென்டரில் படுக்கை அறை வசதிகள் அதிகப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கோவிட் கேர் சென்டரில் லேசான அறிகுறி உள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக சுமார் 500 படுக்கை வசதிகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட நமது மாவட்டத்தை சார்ந்த நபர்களை சிகிச்சை அளிக்க கோவை மாவட்டத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் படுக்கை வசதிகள் ஒதுக்கீடு செய்ய தலைமைச்செயலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
நமது மாவட்டத்தில் சுமார் 55,000 நபர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. 83 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள நபர்களுக்கு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் மூலம் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு பகுதியில் உள்ள வீட்டில் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருந்தால் அந்த தெரு மட்டும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பொது மக்கள் தேவையில்லாமல் வீட்டிலிருந்து வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். முககவசம் அணிவதோடு அடிக்கடி கைகழுவும் பழுக்கத்தினை கடைப்பிடிக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் கனமழையினால் சுமார் 34 ஹெக்டர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 30,000 வாழை மரங்கள் காற்று மற்றும் மழையினால் சேதமடைந்துள்ளது. மழையின் காரணமாக 42 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. சுமார் 400 வீடுகள் சிறிய அளவில் சேதமடைந்துள்ளது. கன மழையின் காரணமாக கூடலூர் பகுதியில் சுமார் ரூ.4 கோடி மதிப்பில் சாலை மற்றும் சிறிய பாலம் சேதமடைந்துள்ளது. அதே போல் உதகமண்டலம் பகுதியில் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சியின் மூலம் ஊராட்சி பகுதியில் சேதமடைந்துள்ள சாலை மற்றும் சிறுபாலங்களை சீரமைக்கும் பணிகள் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது. கனமழையினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த அறிக்கை அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
Comments
Post a Comment