DINAVELMEDIA7 # தென்காசியில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் திடீர் ஆய்வு.
தென்காசியில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் திடீர் ஆய்வு.
தென்காசி மாவட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டவதற்கான இடத்தினை தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கங்கள் பொதுநல அமைப்புகள் சார்பில் ஆணையரிடம் மக்களுக்கு பயன்படும் இடத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைக்க மனு அளிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு ஓராண்டை கடந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்காலிகமாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உள்ளிட்ட நிர்வாக கட்டிடங்கள் கட்டுவதற்கு தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, இலத்தூர் ஆகிய பகுதிகள் மற்றும் ஆய்க்குடி, பாட்டாக்குறிச்சி, ஆயிரப்பேரி உள்ளிட்ட பல இடங்களை தேர்வு செய்து இதுதொடர்பாக அறிக்கையை மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன் அரசுக்கு அனுப்பி வைத்தார்.
அதனைதொடர்ந்து அப்போதைய தமிழக வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அமைய உள்ள இடங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனிடையே ஆயிரப்பேரி பகுதியில் ஆட்சியர் அலுவலகம் அமைவதாக கூறப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு இருந்து வந்த நிலையில் பெரும்பாலானோர் ஆட்சியர் அலுவலகம் நகர எல்லைக்குள் அமைய வேண்டும் எனவும், அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் மையப்பகுதியில் இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இதுகுறித்து சட்டமன்றத்திலும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மக்கள் ஏற்றுக்கொள்ளும் இடத்தில் அலுவலகம் கட்டப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளை தற்போதைய தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார். தேர்வு செய்யப்பட்ட இடங்களையும், கட்டிடம் அமைவதற்கான சாத்திய கூறுகளையும், சாதக பாதகங்களை துறை அதிகாரிகளிம் கேட்டறிந்தார். இந்த ஆய்வு பணியில் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வருவாய் நிர்வாக ஆணையர் பணிந்திரரெட்டி குற்றாலம் சுற்றுலா மாளிகையில் ஆட்சியர் அலுவலகம் அமைவது குறித்து சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்பதற்காக அழைப்பு விடுத்தார் . நாடாளுமன்றம் நடக்கும் நிலையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞானதிரவியம், தனுஷ்குமார் ஆகியோரின் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் மனு அளித்தனர்.
இதுபோன்று அதிமுக, மதிமுக அரசியல் கட்சி சார்பிலும் மற்றும் தென்காசி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் சார்பிலும் மக்கள் பயன்பெறும் இடத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைய மனு அளிக்கப்பட்டது. தென்காசி மாவட்ட செய்தியாளர். காளிராஜ்.
Comments
Post a Comment